Thursday, February 25, 2010

விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்!

அன்பு நண்பர்களே,

லினக்ஸ் குறித்து இன்னும் பலருக்கு பலவிதமான ஐயங்கள் இருக்கின்றன. நிறுவிய பின்னர் பயன்பாட்டிற்கு எவ்விதம் இருக்குமோ... அல்லது விண்டோஸைப் போன்று எளிதாக இருக்காதோ என்ற அச்சம் இருக்கக்கூடும். அவர்களுக்கான செய்திதான் இது.

YLMF open source operating system (Ylmf OS) என்ற ஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் அந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைந்திருக்கிறது. விண்டோஸ் எக்ஸ்-பி இயங்குதளத்தை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதே வகையில் இதையும் பயன்படுத்தலாம்.

கிட்டத்தட்ட விண்டோஸ் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதே போன்றே இதுவும் இருக்கிறது. முதலில் சீன மொழியில் வெளியிடப்பட்ட இந்த இயங்குதளம் தற்போது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. உபுண்டு 9.10-ஐ அடிப்படையாகக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க திற மூல மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நாம் கணினியை இயக்க முடியும் என்றாலும் விண்டோஸிற்காக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களையும் "வைன்" [ Wine] மூலமாக நிறுவி பயன்படுத்தலாம்.

இதை வேகம் குறைந்த பழைய கணினிகளிலும் நிறுவ முடியும்.

ஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்காக சில படங்கள் :








விண்டோஸைப் போன்றே லினக்ஸையும் அனைவரும் பயன்படுத்த முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இதை வாய்ப்பிருப்போர் பயன்படுத்திப் பாருங்கள்.

மேற்கொண்டு இதைப் பற்றி அறிய விரும்புவோரும், பதிவிறக்க விரும்புவோரும் தட்டச்ச வேண்டிய முகவரி:
http://www.ylmf.org/en/download.html

குறிப்பு:
நண்பர்களே... நான் நேரடியாக உபுண்டு 9.10வைத்தான் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இந்த இயங்குதளத்தை பதிவிறக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

Tuesday, June 02, 2009

பிச்சை

சார்.... எனக்கு ஒடம்புக்கு முடியல சார்... அவசரமா போகணும் சார்.. சீட் கிடைக்குமா சார் என்று டி.டி.யிடம் கெஞ்சிக்கொண்டே அவர் வந்தார்.

பொறுங்க... அடுத்த ஸ்டேசன்ல பாத்துட்டு சொல்றேன் என்றார் டி.டி.இ.

சார்.. கொஞ்சம் பாத்துப்பண்ணுங்க.... விடவில்லை அவர்.

இருந்தா ...சொல்ல மாட்டேனா... ஏன் நம்ப மாட்டேன்றீங்க...? என்ற டி.டி.யின் பதிலுக்கு பின்னர் தாழ்ந்த குரலில் அவர் பேசினார். சில நிமிட பேரத்திற்குப் பிறகு அவருக்கு உட்கார இடம் கிடைத்து விட்டது.

கொஞ்சம் தள்ளி உக்காருங்க... அதிகாரத்தொனியில் கூறி விட்டு, அப்பாடா....உஸ் என்று கூறிக்கொண்டே அமர்ந்தார்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை

கரகரப்பான குரலில் கண்ணில்லாத ஒருவர், ஒரு கையில் நெளிந்த அலுமினியத்தட்டையும் அடுத்த கையில் ஊன்றுகோலையும் வைத்துக்கொண்டு பாடிக்கொண்டு வந்தார். குரலில் இனிமை இல்லை என்றாலும் வழக்கமாக பாடி வருவதாலோ என்னவோ, தடையின்றி வார்த்தைகள் சீராக வந்தன.

சார்... முறுக்கு... முறுக்கு சார்.. பாக்கெட் பத்து ரூபாதான்,

சாய்... சாய்.... கரம் மசாலா சாய்... சாய்,

பலாச்சுளே.. பலாச்சுளே... தேன் மாதிரி இனிக்கும்.. சாப்பிட்டு பாத்துட்டு வாங்குங்கையா... பிடிக்கலைன்னா காசு வேணாம்யா..,

நெலக்கடலே.... சூடா நெலக்கடலே...

இப்படியாகவும், இன்னும் பிற சத்தங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன.

அவர்களுடன் கையைத்தட்டி ஒலியெழுப்பி, உட்கார்ந்திருப்பவர்களின் முன்னால் கையை நீட்டும் திருநங்கை சுந்தரி வந்துகொண்டிருந்தாள். நல்ல கருப்பு நிறம், மஞ்சள் பூசிய முகம், பெரிய குங்குமப்பொட்டு, சற்றே அழுக்கான புடவை, இருந்த முடியை ஒன்றாக கட்டி ஒரு ரப்பர் பேண்டு என பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் இருந்தாள் சுந்தரி. ஒன்றிரண்டு காசுகள் அவள் கையில் இருந்தன.

கையை நீட்டும் சமயங்களில் அய்யோ பாவம் என பரிதாபப்பட்ட சிலர் காசு கொடுத்தனர். சிலர் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டு உறங்குவதைப் போல நடித்தனர். பலர் பதில் பேசாமல் அமைதி காத்தனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக் கையைத்தட்டி, நீட்டிக்கொண்டே வந்தாள் சுந்தரி.

இவங்களோட ரோதனையா போச்சு... நிம்மதியா இருக்க விடுறாங்களா... என்று முணுமுணுத்தார் அவர். இப்பத்தான் ஒருத்தன் பிச்சையெடுத்துட்டு போனான்.. இப்ப இது வேற.. ரொம்ப இன்டீசண்டா பிகேவ் பண்றாங்க. வேல எதுவும் பாக்காம பிச்ச எடுத்துகிட்டு... இவங்கள எல்லாம் கம்ப்ளைண்ட் பண்ணி உள்ள தள்ளணும்.. நாட்டுல சட்டம் ஒழுங்கே சரியில்ல... என்றார் மெல்லிய குரலில்.

சுந்தரியின் காதில் அது விழுந்தது. அப்ப நீ வேல கொடு சார். பாக்குறேன் என்ற திடீர் கேள்வியில் தடுமாறிப்போனார் அவர்.

நானா... எங்கிட்டயா கேக்குற... என்ன தெகிரியம் உனக்கு என்று பொங்கினார் அவர்.

வேணும்னா பிச்ச எடுக்குறேன். வேற வழியில்லன்னுதானே.. நானும் மனுச ஜென்மம்தானே.. புரிஞ்சிக்க சார்... என்றாள் சுந்தரி.

என்னா, வாயெல்லாம் நீளுது... மற்றவர்கள் முன்பாக அவமானப்பட்டது போல உணர்ந்தார். அவரிடமிருந்து வார்த்தைகள் கோபத்துடன் வெடித்தன.

அமைதியாக பேச ஆரம்பித்த சுந்தரியும் தர்க்கம் செய்ய ஆரம்பித்தாள். சில நிமிடங்களில் வண்டியில் இருந்த அனைவரும் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.

உணர்ச்சி வசப்பட்டதில் அவருக்கு கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. டி.டி எங்கே... என்று எழுந்து தேடினார். ரெயில்வே போலீஸ் ஒருவர் அவ்வழியாக வந்தது அவருக்கு வசதியாயிற்று.

சார். இந்த பிச்சக்காரங்களாள தொந்தரவு தாங்க முடியல. பப்ளிக் நியூசன்ஸ்னு தூக்கி உள்ள போடுங்க என்று படபடத்தார்.

என்ன நடந்துச்சு.. ஏன் கோபப்படுறீங்க என்றார் போலீஸ்.

பிச்ச எடுக்குறதே தப்பு. அதுவுமில்லாம இண்டீஸண்டா பிகேவ் பண்றாங்க... பப்ளிக்க நிம்மதியா டிராவல் செய்ய விடாம தொந்தரவு பண்றாங்க.. டிக்கெட்லெஸ் டிராவல்... இதுக்கு மேல என்ன வேணும்.. என்றார் அவர்.

இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க... ஏம்மா சுந்தரி... ஏன் வீணா பிரச்சினை பண்ற... என்றார் போலீஸ்.

எல்லாரும் கவனிப்பதை அறிந்து... சார்..இத சும்மா விடக்கூடாது சார். நான் அபீசியலா கம்ப்ளெயிண்ட் எழுதித்தாரேன். ஆக்சன் எடுங்க.. என்றார் அவர்.

சரி.. சரி.. விடுங்க.. விடுங்க... நான் அடுத்த ஸ்டேசன்ல இறக்கி ஆக்சன் எடுக்குறேன். நீங்க உக்காருங்க... என்று கூறிவிட்டு சுந்தரி... என் கூட வா... என்று அழைத்துக்கொண்டு நகர்ந்தார் போலீஸ்.

இறங்கும் வழியருகே நின்று கொண்டு பேசத்தொடங்கினார் போலீஸ். சுந்தரி... ஏன் பிரச்சினை பண்ற? வர்றவங்கள தொந்தரவு பண்ணாம இருக்க முடியலயா... ஒங்களையெல்லாம்... ரெண்டு போடு போட்டாத்தான் அடங்குவீங்க..

நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லல. வேல கொடு சார்.. பிச்ச எடுக்குறத விட்டிறேன்னு சொன்னேன். அதுக்கு என்னா கோபம்... என்றாள் சுந்தரி.

பிச்ச எடுக்குற ஒனக்கெல்லாம் எதுக்கு மானம் ரோசமெல்லாம்....ம்ம் என்றார் போலீஸ்.

வேணும்னா இதப்பண்றேன். ஒடம்புக்கு முடியாம இருக்குற அக்கா, எப்பவும் இருமிகிட்டு இருக்குற அம்மா... ம்ம்... நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன்.. எங்க வேலைக்கு போனாலும் ஒரு மாதிரியா பாக்குறாங்க.. எத்தன இடத்துக்கு வேல கேட்டுப்போனேன் தெரியுமா? எங்கயும் வேலயே கிடைக்கல. நீ வேலத் தரியா சார்... நான் செய்யறேன் என்றாள் சுந்தரி.

போலீஸ் அமைதி காத்தார்.

சரி என்ன விடு சார்.. யார் சார் பிச்ச எடுக்கல...? என் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணாரே.. அந்த ஆளு... எப்படியாவது ஒக்கார சீட்டு கொடுங்கன்னு டி.டி..கிட்ட கெஞ்சுனத போன ஸ்டேசன்ல பாத்தேன். அது என்ன..? டி.டி. அதுக்காக அந்த ஆளுகிட்ட பிச்ச வாங்குனார். பசங்களுக்கு பாடம் சொல்லித்தர பள்ளிக்கூடக்காரங்களெல்லாம் பிச்ச எடுக்குறாங்க. எந்த கவர்ன்மெண்ட் ஆபிசுலேயும், போலீசு ஸ்டேசன்லேயும் ஏதாவது காரணத்த சொல்லி பிச்ச எடுக்காத கவர்ன்மெண்ட் ஆளுங்க இருக்காங்களா? ஏதோ அப்படியும் கொஞ்சம் நல்லவங்க இருக்குறதாலதான் மழையும் பெய்யுது. அரசியல்வாதிக எல்லாம் மக்கள்கிட்டே ஓட்டுப்பிச்ச வாங்குறாங்க. ஓட்டுக்கு இவ்வளவுன்னு காசு கொடுத்து மக்களையும் பிச்சக்காரனாக்கிடுறாங்க. இல்லேன்னா... எல்லோரோட வீட்டுக்கும்........, ......., ......., இலவசம்னு கொடுத்து கொடுத்து, அத்தனை பேரையும் பிச்சக்காரனாக்காம விடப்போறதில்லன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்காங்க. கடவுள்கிட்டே அந்த வரம் தா, இந்த வரம் தா..ன்னு பிச்ச கேக்காதவங்க இருக்காங்களா..? அப்புறம் வேண்டுதல் நிறைவேறிருச்சுன்னு கடவுளுக்கே மயித்துல இருந்து தங்கக்கட்டி வரைக்கும் போட்டு கடவுளையும் பிச்சக்காரனாக்கிடுறாங்க. எல்லார் மேலேயும் ஆக்சன் எடுப்பீங்களா சார்?

இந்தப்பேச்சாலதான் எல்லாம் கெடுது.. தவள மாதிரி... சரி, சரி வாய மூடிக்கிட்டு போ.. ஸ்டேசன் வந்திருச்சு.. ஒன் மேல ஆக்சன் எடுத்திருக்கேன்னு அந்த ஆள்கிட்டே சும்மா சொல்லி சமாளிக்கிறேன். இனிமேலாவது எந்த பிரச்சினைலேயும் மாட்டிக்காத என்றார் போலீஸ்.

அப்படிச்சொல்லி அந்த ஆள்கிட்டேருந்து எதையாவது புடுங்கலாம்னு பாத்தியா சார்?... புன்னகைத்துக் கொண்டே கேட்டாள் சுந்தரி.

அடீ...ங்... அடிமடியிலேயே கைய வக்கிறியா... என்றார் போலீஸ்.

அடப் போ...சார்.. காசு தராம நீ சுண்டல் வாங்கித்தின்னத பாத்தேன் சார். ஆமா அதுக்கு பேரு என்னா சார்.. ஓஸியா.. இல்ல பிச்சையா? நான் யார்கிட்டேயும் கம்ப்ளெயிண்ட் பண்ண மாட்டேன். பயப்படாத சார்... சிரித்துக்கொண்டே வண்டியை விட்டு இறங்கினாள் சுந்தரி.

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்திக்கண்ணா
குறை ஒன்றுமில்லை கோவிந்தா.....

அடுத்தப்பெட்டியிலிருந்து பாடல் ஒலி கேட்டது.

Friday, May 15, 2009

வார்த்தைகளின் வலிமை

முனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.முனிவரும் அதற்கிணங்கினார்.

அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது. அந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.

"எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..?" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

"உனக்கு அது குறித்து என்ன தெரியும்..? நீ ஒரு அறிவில்லாத முட்டாள்" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.

அந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், " நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

வார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.