Wednesday, December 15, 2004

குற்றாலம் - 1

நைட் எட்டு மணிக்கு தாமோதரன் மெஸ்ல சாப்புடுற அப்பத்தான் அந்த பேச்சு வந்துச்சு. எலுமிச்ச சாதம், உருளக்கெழங்கு சிப்ஸ¤ன்னு எல்லாரும் ருசிச்சு சாப்புட்டுகிட்டு இருந்தாங்க.

நிஜாம்தான் ஆரம்பிச்சாப்ல ... "குற்றாலத்துல தண்ணி வருதாம்ல.. பேப்பர்ல போட்டுருக்கான்.."

குத்தாலம்.. பச்சப்பசேல்ன்னு செடிக..மரங்க... பச்சயும் நீலமும் கலந்த கலர்ல மலை.. அந்த மலைல வெள்ளிய காச்சி ஊத்துன மாதிரி அங்க அங்க அருவிங்க... காத்துல வர்ற குளுமை, ஒடம்பு நனயாம அடிக்குற சாரல்... இப்படின்னு அருவியில குளிக்கப் போறதுக்கு முன்னாலயே மனசு ரெக்க கட்டி பறக்குற மாதிரி இருக்கும்.

சீசன் தொடங்குறதுக்கு முன்னாடி போனா கொஞ்சம் நல்லா இருக்கும். சீசன் டைம்ல போனா குளிக்கவே முடியாது. கூட்டம்னா கூட்டம்... அவ்ளோ கூட்டம் இருக்கும்.

மொதல்ல மாதிரியில்லாம் இப்ப இல்ல.. சும்மா வெறும் முழங்கால் அளவு தண்ணி தேங்குற அளவுக்கு இருக்குற பள்ளத்துல கொஞ்ச தூரம் நடந்து போயி அருவில அவ்வளவு பேரும் ரொம்ப சந்தோசமா குளிப்பாங்க... ஆனா இப்பல்லாம் அப்படியா...? எல்லாத்தையும் சிமிண்டால கட்டி வச்சிருக்காங்க.. ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனியா குளிக்கிற மாதிரி நடுவுல காங்கிரீட்ல ஒரு திண்டு வேற கட்டி வச்சிருக்காங்க. பிடிச்சு குளிக்க பெரிய பெரிய பைப் வேற...ம்ம்... என்னதான் இருந்தாலும் முத முதல்ல அருவிய பாத்த மாதிரி இல்ல. நாளு ஆக ஆக மனுசன் தான் மாறுறது மட்டுமில்லாம பாக்குறத எல்லாம் வேற மாத்திப்புடுறான். அட.. நல்லா இருந்தா பரவாயில்ல... எல்லாத்துலயும் காசு பாக்குறதுலதான கண்ணா இருக்கான்.

அப்படித்தான் ஒரு தடவ சீஸனப்ப போயி அருவில ரெண்டு மூணு நிமிசம்தான் நின்னுருப்போம். திண்டு மேலே வெரட்ட போலீஸ்காரன் ரெடியா நிக்குறான். ஒரு தடவ சொல்லுவான். கேக்கல... அவ்வளவுதான்... அப்புறம் அவன் கைல இருக்குற குச்சிதான் பேசும். குளிக்குறத விட எப்ப போலீஸ்காரன் போகச்சொல்லுவானோ அப்டீங்குறதுலதான் கவனம் பூராவும் இருக்கும்.... அப்புறம் என்ன...? அடச்சே..ன்னு ஆகிப்போகும்... இங்க குளிக்க வந்தமா..இல்ல அடி வாங்க வந்தமா...ன்னு.. அப்ப மட்டும் போலீஸ் மேல கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்.. அவன் மட்டும் நாள் பூரா யாரும் விரட்டாம அருவில குளிச்சுகிட்டு நிக்கிறானேன்னு...

அப்புறம் ஒடம்பு பூராவும் எண்ணெய தேச்சுகிட்டு வர்ற ஆளுங்க மேல ஒரசுறதுல ஒடம்பு பூரா மறுபடி ப்¢சுபிசுங்கும்... மறுபடியும் குளிக்கணும் போல இருக்கும்.

கொஞ்சம் திமிர் பிடிச்ச தெனாவெட்டு ஆளுங்க... உள்ள சரக்க நல்லா ஊத்திகிட்டு மாடு மாதிரி குளிச்சுகிட்டு இருக்குறவங்க மேல வந்து விழுவாங்க... அப்பயும் ஏண்டா குளிக்க வந்தோம்னு இருக்கும்.

வெளியூர்ல இருந்து வர்றவங்க குளிக்கிற பழய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி,சிற்றருவி... கொஞ்சம் சிரமப்பட்டு போற செண்பகா தேவி அருவி... எல்லா அருவிலயும் குளிச்சே ஆகணும்னு நெனக்கிற எளவட்டங்க மட்டும் போற தேனருவி... கவர்மெண்ட் ஆளுங்க பணக்காரங்க குளிக்கிற பழத்தோட்ட அருவி ... இன்னும் அங்கங்க சின்ன சின்னதா நெறய பேருல அருவிங்க..... இப்படி குற்றாலத்துல எங்க பார்த்தாலும் மனசு எல்லாம் உருகிப்போற மாதிரி இருக்கும்... சும்மா..சில்லுன்னு அடிக்கிற காத்துல முதல்ல கொஞ்சம் ஒடம்பு குளுரத்தான் செய்யும்... ஆனா அருவில புகுந்துட்டோம்னு வைங்க... அடடா..... அந்த சுகத்தயெல்லாம் வார்த்தையில் சொல்லி வெளங்க வைக்க முடியாதப்பு...

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்கிட்டிருக்கேன் பாருங்க...ம்ம்.. இது மாதிரி அடிக்கடி சுத்துப்பிரயாணத்த எல்லாம் நெனச்சுப்பாத்தாலே வயசெல்லாம் குறஞ்சிட்ட மாதிரி இருக்கு... நேரம் கெடைக்கும் போது சொல்லப்பாக்குறேன்...

ரெண்டு வருசமா அருவில தண்ணி சரியா வரல. அதனால குத்தாலத்துக்கு போகல...

நிஜாம் சொன்னவுடனே மெஸ்ஸில சாப்பிட்டுகிட்டு இருந்த அத்தன பேருக்கும் ஒரே சந்தோசம்...
இந்த வாட்டி கண்டிப்பா போய்ர வேண்டியதுதான்...

நெறய வண்டியில போகணும்...

சும்மா வேலக்கி போயி அலுத்துப்போச்சுப்பா...

இப்படி ஆளுக்காளு பேச எனக்கும் சந்தோசம்...

ஒரு மூணு நாலு வாட்டி குத்தாலத்துக்கு போயிட்டு வந்திருக்கேன். ட்ரெயினியா இருக்குறப்ப ஒரு தடவ... அப்புறம் ஜிம்கானாவுல போனது.. பசங்க கூட வண்டில போனது... இப்படி...
ஆனா ஒரு தடவ கூட தேனருவிக்கு போனது கெடயாது. இந்தத்தடவ போனா கண்டிப்பா போகணும்னு நெனச்சுகிட்டேன்.

பேச்சு எப்படியோ தெச மாறிப்போச்சு... ஒருத்தன் அடுத்தவன குத்தம் சொல்ற மாதிரி ஆகிப்போச்சு...
போன வருசம் கூப்பிட்டனே வந்தியாலே..?

சும்மா சொல்றீங்கடா... எல்லாம் வெட்டியா பேசுறீங்க....
கூப்பிட்டா ஒருத்தனும் வரமாட்டானுங்க...

இப்படியா பேச்சு முத்தி யாரு சொன்ன சொல்ல காப்பாத்துறங்குற அளவுக்கு ஆயிப்போச்சு...
சத்தியமோகன் சொன்னான்... எலே... இப்பவே கிளம்ப நான் ரெடி... கூட யாரு வர்றீங்க..?
நெறய பேரு கப்சிப்புன்னு வாயடச்சிட்டாங்க...

எனக்கு ரோசம் பொத்துகிச்சு.. நானும் ரெடிதான்னு சொன்னேன்... எப்படியும் பிரதீப்பையும் கூட்டிகிட்டு போயிரலாம்ணு தெரியும். நிஜாமும் வர்றதுக்கு ரெடின்னு சொன்னாப்ல.
ரமேஷ், சீனு, பால்ராஜா, தமிழு எல்லாம் வரமுடியலன்னு சொன்னாங்க.

சரி.. யாரு வந்தாலும் வரலன்னாலும் கண்டிப்பா உடனே கெளம்பிற வேண்டியதுதான்னு ஒரு தீர்மானமாகிப்போச்சு.

அடுத்த ஒரு அரமணி நேரத்துல கெளம்புறதுக்கு ரெடியாய்ட்டோம் - செலவுக்கு பணம், ஒரு செட் மாத்துத்துணி, துண்டு, அருவில குளிக்க டவுசர் அவ்வளவுதான. அடுத்தநாள் ஞாயித்துக்கெழமங்கிறதுன்னால வசதியாப்போச்சு. ஒரு வேள சீசன் நல்லா இருந்துச்சுன்னா திங்கக்கெழமயும் குத்தாலத்துலேயே தங்கி இருந்துட்டு வர்றதுக்கு வசதியா கம்பெனில ஈ.எம்.எல் சொல்லிறணும்னு ரமேஷ்கிட்ட சொல்லியாச்சு. . என்னோட வெஸ்பா வண்டியயும் நிஜாமோட வெஸ்பா வண்டியயும் கொண்டு போகலாம்ணு தீர்மானமாச்சு.

என்கூட பிரதீப்பும்... நிஜாம் கூட சத்தியமோகனும் வந்தாங்க... நைட்ல வண்டி ஓட்ற சுகமும் அலாதிதான்.. வண்டிங்க அவ்வளவா இருக்காது. என்ன.. பள்ளம் மேடு சரியா தெரியாது.. கொஞ்சம் சூதானமா வண்டிய ஓட்டணும்.

முத்தையாபுரம் பல்க்-ல பெட்ரோல போட்டுகிட்டு கெளம்புனோம். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டு வழியா தூத்துக்குடி-திருநெல்வேலி ஹைவே ரோட்ட பிடிச்சு, அளவான வேகத்துல போனோம்.. பாளயங்கோட்ட பக்கத்துல போகும் போது... நேரா போனா ஒன்வே ரோடு... அதனால மெடிக்கல் காலேஜ் வழியா சுத்தி திருநெல்வேலி போகணுமே..ன்னு யோசன...

பிரதீப்பும் சத்தியமோகனும் அடிச்சு சொன்னாங்க... ஒம்போது மணி வரைக்குந்தான் ஒன்வே.. அதுக்கப்புறம் ஒன்வே கெடயாது.. இப்பதான் மணி ஒம்போதர ஆயிப்போசுல்ல... தாராளமா போலாம்....அப்டீன்னு.

சரிதான்னு முருகன்குறிச்சி வழியா நேரா பஸ்ஸ்டாண்ட் பாத்து போனமா...? மேம்பாலத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நின்னுகிட்டு இருந்தார்.

எங்கள பாத்ததும் கைய காமிச்சு நிறுத்தச்சொன்னார். ஓரமா வண்டிய நிறுத்திட்டு வந்தோம்...
எங்கிருந்து வர்றீங்க...?

தூத்துக்குடிலேருந்து சார்...

அதெல்லாம் சரி... பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... நீங்களே இப்படி பண்ணுனா எப்படி...?

என்ன சார் ப்ராப்ளம்...?

ஆர்.சி.புக், லைசென்ஸ் எல்லாம் இருக்கா...?

இருக்கு சார்... எடுக்கவா..?

இருக்கட்டும்... இருக்கட்டும்... அதெல்லாம் பத்திரமா இருக்கட்டும்...

எங்களுக்கு ஒண்ணும் புரியல...

ஒன்வேல வரலாமா....?

சத்தியமோகன் கொஞ்சம் சமாளிக்கலாம்னு... அப்பிடியா சார்... சரியா கவனிக்கல... அப்டீன்னான்.

ஒரு இடம்னா பரவால்ல... சமாதானபுரத்துல இருந்து ஒன்வே அப்டீன்னு பதினெட்டு எடத்துல போர்டு வச்சிருக்கமே... கவனிக்கலன்னு சொன்னா எப்படீ...?

சார்... டைம்தான் ஒம்போதரைக்கு மேலே ஆச்சே...

அதனால... ஒங்க இஷ்டத்துக்கு ஒன்வேல வருவீகளோ... எப்படீ..?

எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. அந்த நேரம் பாத்து நாங்க வந்த அதே வழியா ஒரு வேன் வந்துச்சு... அதயும் ஓரங்கட்டுனாரு அவரு. வேன்ல இருந்து டிரைவர் குதிச்சு வெளிய வந்தாரா... நேரா கான்ஸ்டபிள் கைய பிடிச்சு குலுக்குனாரு... மறுபடி வண்டியில ஏறி உக்காந்துகிட்டு வேன ஸ்டார்ட் கெளம்பி போயிட்டாரு...!!

இப்பத்தான் எங்களுக்கு வெசயம் புரிஞ்சுச்சு.

No comments: