Wednesday, December 22, 2004

குற்றாலம் - 8

செம்பகாதேவிக்கு மேல மலைல செருப்ப ஒளிச்சு வச்சுட்டு வந்தோம்ல... அத எடுத்துட்டு வந்துருவோம்னு சொன்னேன்.

சத்தியமோகன் சொன்னான்... செருப்பு போனா போகுது.. விட்ருவம்டா... வேற வாங்கிரலாம்..ன்னு...
அவனுது வெறும் சிலிப்பர்.. நம்மது அப்டீயா...? போயி எடுத்துத்தான் ஆகணும்னு அடம் பிடிச்சு, மறுபடியும் எல்லாரும் மேல போனோம்.

செருப்பு அடயாளம் வச்ச இடத்துல போயி பாத்தா....! யாரோ புண்ணியவான் செஞ்ச வேல... அங்க... சத்தியமோகனோட செருப்பு மாத்திரம்தான் இருக்கு.. மத்த மூணு பேரோட செருப்பு... போயே போயிந்தி...!!

எல்லாம் விதின்னு நொந்துகிட்டு கீழ எறங்கி வந்தமா... செம்பகாதேவிய இப்ப பாக்க ரொம்ப பயமாகிப் போச்சு.. ஏன்னு கேக்குறீங்களா...? செம்பகாதேவிக்கு போயிட்டு வந்தவங்களுக்குத்தான் நான் சொல்றது புரியும். அருவி மலைய ஒட்டி இருக்குற சின்ன திண்டு பக்கத்துலதான் விழும். அதுல வர்ற தண்ணி எல்லாம் அதுக்கு முன்னாடி இருக்குற கொளத்துல நெரம்பி அதுக்கப்புறம்தான் போகும்.
இப்ப என்னாடான்னா... அருவில இருந்து விழுற தண்ணி திண்டுலயும் விழல... கொளத்துலயும் விழல... எல்லாத்தையும் தாண்டி தனியா விழுந்துகிட்டு இருந்துச்சு...!

எப்பயும் அருவி விழுற சத்தம் கேட்க சுகமா இருக்கும்ல... இப்ப அருவியோட சத்தத்த கேக்க முடியல... யாரயோ அடிக்க போற ஆக்ரோசத்தோட, செம்மண் கலந்த நெறத்துல தண்ணி போற வேகத்தப்பாத்தா.... இயற்கைக்கெதுத்தாப்ல யாரும் நிக்க முடியாதுங்கிறது நல்லாவே தெரிஞ்சது.
வண்டிய எடுத்துகிட்டு அய்ந்தருவிக்கு போய் பாக்கலாம்னு போனோம்.. அங்க அய்ந்தருவிய காணோம்.. அஞ்சும் ஒண்ணா சேந்து ஒரே அருவியா... கோயில் படிக்கட்டுல இறங்கிப் போவோம்ல.. அதுக்குப் பக்கத்துல விழுந்துகிட்டு இருந்துச்சு...!! அதுக்குப் பக்கத்துலயே போகக்கூடாதுன்னு போலீஸ் ஏக கெடுபிடி...

குத்தாலத்துலயே ஒரு ஹோட்டல பாத்து திருப்தியா சாப்டுட்டு நைட் தூங்க செங்கோட்டக்கிப் போயிட்டோம். காலைல ஒரு நாலு நாலரைக்கு கெளம்புனா ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போயிரலாம்னு திட்டம்.

அன்னக்கி அலஞ்ச அலச்சல்ல... சொல்லணுமா... நல்லா தூங்குனோம். தற்செயலா எந்திரிச்சிப்பாத்தா அஞ்சு மணி ஆகிப்போச்சு. அடிச்சுப்பிடிச்சு கெளம்பி லாட்ஜை காலி பண்ணிட்டு போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணுனா..... என்னத்த சொல்ல.... நிஜாமோட வண்டி ஸ்டார்ட் ஆகல...!

ஸ்பார்க் பிளக்க கழட்டி கிளீன் பண்ணி பாத்தோம். வண்டி ஸ்டார்ட் ஆச்சு... ஆனா உடனே நின்னுருச்சு. எப்டியாவது ஸ்டார்ட் பண்ணிறனும்னு விடாம முயற்சி பண்ணுனோம்... வள்ளுவர் சொன்னது மாதிரி.. முயற்சி திருவினையாச்சு... வண்டி ஸ்டார்ட் ஆகும் போது மணி ஆறு ஆறரை இருக்கும்.
எப்பிடியும் வேலக்கி போயே ஆகணும்னு நான் குறியா இருந்தேன். சத்தியமோகனும் நானும்தான் ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போகணும்.. அதனால அவன ஏன் வண்டியில உக்கார வச்சிட்டு நாங்க சீக்கிரமா போறோம்... நீங்க ஆற அமர வாங்கன்னு நிஜாம்கிட்டயும் பிரதீப்கிட்டயும் சொல்லிட்டு வண்டிய கிளப்புனனா....

இந்த மழை இருக்கு பாருங்க... அப்பயும் நம்ம விட்டுச்சா... மறுபடியும் விழ ஆரம்பிச்சிருச்சு... வேகமா வந்தா தார்ரோட்ல வழுக்கிருமோன்னு பயம் இருந்ததால அம்பது அறுபதுக்கு மேல போகல... ஆலங்குளத்த தாண்டி கொஞ்ச தூரம் வந்த பின்னாடிதான் மழை நின்னுச்சு... அங்க இருந்து நல்ல வேகம்....

திருநெல்வேலிக்குள்ள வரும் போது காலைல எட்டேகால் மணி... எல்லோரும் ஸ்கூல்,ஆபீசுன்னு போறதால ட்ராபிக் ரொம்ப இருந்துச்சு... பாளயங்கோட்ட வரும் போது எட்டு இருபத்தஞ்சு... பஸ் பின்னாடியே போனா வேகமா போகலாம்னு போனா.... கொடுமை... அது திருச்செந்தூர் பஸ்... திருச்செந்தூர் ரோட்ல கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி மறுபடி தூத்துக்குடி ரோட்டுக்கு வந்தோம்.

ஊர விட்டு வெளிய வந்த பின்னாடி... வண்டியில எவ்வளவு வேகமா போக முடியுமோ அந்த அளவுக்கு வேகமா ஓட்டுனேன்... ஆக்ஸிலேட்டர அதுக்கு மேல திருப்ப முடியல... எவ்ளோ வேகம்னு பாத்தா... நம்புவீங்களோ மாட்டீங்களோ.... நூறுக்கும் நூத்து அஞ்சுக்கும் நடுவுல முள்ளு இருந்துச்சு....

.. "ம்ம்ம்ம்ம்ம்..." -ன்னு வண்டி போற சத்தம் மாத்ரம்தான்.... வேற எந்த சத்தமும் கேக்கல... சரியான விரட்டு.... அப்டியே பறக்குற மாதிரி இருந்துச்சு. வல்லநாடு, புதுக்கோட்டை எல்லாம் போனதே தெரியல.

வீட்டுக்கு வந்தப்ப மணி ஒம்போது... யூனிபார்மை அடிச்சி பிடிச்சி மாட்டிகிட்டு கம்பெனில வேலக்கி போய் சேந்தப்ப ஒம்போது எட்டு... போயி உக்காந்து டேபிள் மேல கைய வச்சா... கை தன்னால நடுங்கிகிட்டு இருக்கு...! கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் ஆட்டம் நின்னுச்சு... கிட்டத்தட்ட அம்பது கிலோமீட்டருக்கும் மேல... அத அர மணி நேரத்துல வந்துருக்கோம்...!

ஆர அமர யோசன பண்ணுனேன்...வர்ற வேகத்துல ரோட்டுல சின்ன கல்லு இடறி இருந்தா கூட என்ன ஆயிருக்கும்...? ஏன் இவ்வளவு அவசரப்பட்டு போகணும்.. அவசரப்பட்டு வரணும்ன்னு....!!

பின்குறிப்பு:
1. அதுக்குப்பின்னாடி கொஞ்ச நாளுலேயே சத்தியமோகன் அவனோட மோட்டார்பைக்க வித்துட்டு வெஸ்பா வாங்கிட்டான்..
2. குத்தாலம் போகணும்... தேனருவிய பாக்கணுங்கிற ஆச அத்தோட போச்சு...!!

No comments: