Tuesday, January 11, 2005

செல்வதாஸ் - விழி

இப்படியெல்லாம் கூட பத்திரிக்கைகள் உண்டா.. என்கிற ஆச்சரியமும் உண்டானது. ஆனால் அப்போது நாமே ஒரு கையெழுத்துப்பிரதி நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உண்டானதே இல்லை.

செல்வதாஸ¤டன் உரையாடிய போது கையெழுத்துப்பிரதி குறித்த கேள்விக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்தது.
ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமெனில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக பேச ஆரம்பித்தோம். பத்திரிக்கையின் குறிக்கோள், பத்திரிக்கையின் உள்ளடக்கம், எத்தனைப்பக்கங்கள், என்று வெளிவருவது, எப்படி வெளியிடுவது, பத்திரிக்கை நடத்துவதில் என்ன என்ன சிரமங்கள் வரக்கூடும்... என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடந்தது. எந்த நேரமும் அதைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி நின்றது.

ஓரளவுக்கு மேலே கூறப்பட்ட விசயங்கள் இறுதியானதும், முக்க்¢யமான ஒன்றுக்கு... கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இரவுப்பணியில் இருந்த போது வேலை இல்லாத நேரங்களில் எல்லாம் பேசியதுமான புத்தகத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரே சர்ச்சை.சர்ச்சை என்றால் வேறு விதமாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இருவரும் அவரவர்களுக்கு தோன்றிய பெயர்களை எல்லாம் எழுதுவது... எழுதிய பெயர்களை ஏன் வைக்கலாம்.. வைக்கக்கூடாது என்று சார்பாக எதிர்ப்பாக எல்லாம் பேசி.. கடைசியில் நான் சொன்ன "விழி" என்கிற பெயரை வைக்கலாம் என்று முடிவானது. விழி என்பது சமூகத்தை பார்க்கின்ற பார்வையாகவோ அல்லது அறியாமையில் இருக்கும் மனிதர்களை எழுப்ப முயற்சிக்கும் குரலாகவோ இருக்கும் என்பதால் அது சரியானதாக இருக்கும் என்கிற என் வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

மற்ற பத்திரிக்கைகளைப் போல ஐந்திலிருந்து பத்து பத்திரிக்கைகள் வரை கையிலேயே எல்லாவற்றையும் எழுதுவது கடினமான காரியமாக தோன்றியதால் ஒரு பத்திரிக்கையை மட்டும் கையால் எழுதுவது என்றும், தேவைப்படும் பத்திரிக்கைகளை நகல் எடுத்துக்கொள்வது என்றும் முடிவானது. நகல் எடுத்தால் வண்ணங்கள் இல்லாமல் கருப்பு வெள்ளையாக தோன்றினாலும், தரப்படும் விசயங்கள் மட்டுமே முக்கியம்- அதுவே போதுமானது என்று எண்ணினோம்.

சாதாரண மையினால் எழுதினால் போதும் என்று நான் நினைத்தேன். செல்வதாஸ் "இந்தியன் இங்க்" எனப்படும் அடர்கருப்பு மையினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நான் முன்பேயே வெவ்வேறு வகையான எழுத்துக்களை எழுதுவதற்காக பலவகையான பேனாநுனி(நிப்பு)களை ஒரு முறை சென்னைக்கு சென்றிருந்த போது, தீவுத்திடலில் வாங்கி வைத்திருந்தேன். அவை இப்போது உபயோகப்பட்டன.

எனது கையெழுத்து ஓரளவுக்கு அழகாகவே இருக்கும். சிறு வயதில் எனக்கு அதில் கொஞ்சம் கர்வம் கூட உண்டு.

பெரும்பான்மையான பகுதிகளை நான் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் பலவிதமான கையெழுத்துக்கள் இருந்தால் அது ஒரு செய்தியில் இருந்து மற்றவற்றை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதால் யாரை தேர்வு செய்யலாம் என்று பேசினோம்.

எழுதுவதற்கு உதவி கேட்டவுடன் சுரேந்திரனும் ரங்கராமனுஜமும் விருப்பத்துடன் முன் வந்தனர்.

கையெழுத்துப்பிரதி என்றாலும் அதில் படங்களும் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..இல்லையா...? எனவே யாருடைய உதவியைக் கேட்கலாம் என்று யோசித்த போது கண்ணனின் நினைவு வந்தது. அவன் ஏற்கனவே விஜயன் திருமணத்திற்காக வரைந்த பென்சில் ஓவியத்தை நான் பார்த்திருந்தேன். உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு தொழில்முறை ஓவியரின் படம் போலத்தான் இருந்தது.

No comments: