Sunday, January 16, 2005

செல்வதாஸ் - இந்தியா டுடே

இதற்கிடையில் அது வரை ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த "இந்தியா டுடே" என்கிற பிரபலமான பத்திரிக்கை தமிழில் வர ஆரம்பித்திருந்தது. அதில் முதன் முறையாக ஒரு குறுக்கெழுத்துப்போட்டியை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அது வழக்கமாக இருக்கும் பொதுவான கேள்விகளில் இருந்து மாறி, அந்தப்புத்தகத்தை முழுவதும் நன்கு படித்தால் மட்டுமே எழுத முடியும் என்பதாக அது அமைந்திருந்தது. அப்போது இருந்த ஆர்வத்தில் விடாமல் எல்லாவற்றையும் படித்து குறுக்கெழுத்துப்போட்டியில் கேட்டிருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இரண்டு விடைகள் வந்தன. இரண்டுமே சரியானதாகவும் தோன்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எந்தவிடையை தேர்ந்தெடுக்கலாம் என்று செல்வதாஸிடம் ஆலோசித்தேன்.

அவர் விடையை சொல்லும் முன்பாக " அண்ணாச்சி.. ஒரு வேள பரிசு கெடச்சா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..?" என்றார்.

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் மெதுவாக சிரித்தார்.
அப்போதுதான் எனக்கு பிடிபட்டது..." அண்ணாச்சி... ஒரு வேள பரிசு கெடச்சா... அது முழுசும் நம்ம "விழி" பத்திரிக்கை நடத்துறக்கு ஆற செலவுக்குத் தர்றேன்..." என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியை உணர முடிந்தது. அவர் சொன்ன விடையை எழுதி போட்டிக்கும் அனுப்பி விட்டேன்.

விழி பத்திரிக்கை குறித்து தொடர்ந்து பேசினோம். கண்ணனும் படம் வரைய முழுமனதுடன் ஒத்துக்கொண்டான்.

"விழி" என்கிற புத்தகப்பெயரை எப்படி எழுதுவது என்பதை தீர்மானிக்க இயலவில்லை. பலவித முறைகளில் விதவிதமாக கிறுக்கிப் பார்த்தேன். பலவிதமாக கிறுக்கியதில் ஒரு வடிவம் மிகவும் பிடித்துப்போனது அவருக்கு. அதே போல வரைய பலமுறை முயன்றாலும் முதலில் இருந்ததுதான் சிறப்பானதாக தோன்றியது. முதல் எழுத்தான "வி" எழுத்து முடிவதையே "ழி"யின் தொடக்கமாக கொள்வதாக அமைந்திருந்தது அது.

அதையே புத்தகத்திற்கான அடையாளமாக வட்ட வடிவில் எழுதிவிட வேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்.

முகப்பு அட்டையில் என்ன படம் வர வேண்டுமென்பதை செல்வதாஸ் முடிவு செய்தார். எந்த ஒரு மலையாளப் பத்திரிக்கையிலோ வந்த ஒரு படத்தை கொடுத்து அதை வரைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விரும்பினார். அலையடிக்கும் கடல், சூரிய உதயம்... இன்னும் என்று ஒரு நவீன ஓவியமாக அது இருந்தது. ஆனால் மிக எளிமையான படமாகவும் இருந்தது.

எல்லாவற்றையும் நாமே சொந்தமாக எழுதுவது என்பது இயலாது என்பதால் சில விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதையும் இணைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்தோம்.

மக்களால் அதிகம் அறியப்படாத மிகச்சிறந்த கவிஞர், அன்பு நண்பர் செல்வராஜை ஒரு கவிதை எழுதித்தர வேண்டினேன். சில தினங்களில் அருமையான கவிதை ஒன்றை அளித்தார் அவர். அதற்கு மேலும் மெருகூட்டும் விதமாக தமிழகத்தில் பஞ்சம் நிலவிய போது எடுக்கப்பட்ட ஒரு மிகப்பழைய புகைப்படத்தை இணைத்தோம்.

மக்கள் கவிஞர் என்று வட இந்தியாவில் அறியப்பட்ட "ஷப்தர் ஹஷ்மி" என்கிற தெருமுனை நாடகக்கலைஞர் சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டிருந்தார். அவரை நினைவு கூறும் வண்ணம் ஒரு செய்தியை தொகுத்து எழுதினோம். மேலும் தேவகிப்பிரியனின் ஒரு அறிவியல் பார்வையும் இடம் பெற்றது. மேலும் ஒரு நண்பரின் கதையும் எங்களுக்கு கிடைத்தது. அறிமுகப்பகுதியில் மனித நேயத்தைக் குறித்து மிக அருமையான ஒரு கருத்தை வலியுறுத்தி செல்வதாஸ் எழுதினார்.குறிப்பிட்ட நாட்களுக்குள் ஓரளவுக்கு நல்ல முறையில் எழுதிவிட்டோம். ஒரு நகல் அலுவலகத்தில் கொடுத்து ஐந்து பிரதிகள் எடுத்தோம். பத்திரிக்கையின் இறுதியில், படிப்பவர்கள் கருத்து அல்லது விமர்சனம் செய்வதற்காக சில வெற்றுப்பக்கங்களையும் இணைத்தோம்.

ஏப்ரல் - 14ம் தேதி பத்திரிக்கையை கொண்டுவந்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முன்பு எதிர்பார்த்திருந்தாலும் சற்று மறந்து விட்ட "இந்தியா டுடே" பத்திரிக்கையின் முதல் குறுக்கெழுத்துப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்தது..!!

No comments: