Thursday, January 20, 2005

செல்வதாஸ் - பொதுச்செயலர்

பத்திரிக்கை வெளியானதும் முதலில் அங்கேயே இருந்த சில நண்பர்களிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னோம். சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவும், மற்ற நண்பர்களிடம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி..!

"விழி" நன்றாக பிரபலம் அடைந்து விடும்.. எல்லோரும் அதைப்பற்றியே பேசுவார்கள் என்று எண்ணத்தொடங்கி விட்டேன்...

சில தினங்கள் கழித்து வாசகர்களின் கருத்தறிய பிரதிகளை சேகரித்துப்பார்ப்போம் என்று முயற்சித்தால்.... ஒரு பிரதியைக் கூட திரும்ப பெற இயலவில்லை..! கடைசியாக யாரிடம் போய் சேர்ந்தது என்பதைக்கூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஓரிரு பிரதிகள் எங்கு போய் சேர்ந்திருக்கும் என்பதை அனுமானிக்க மட்டுமே முடிந்தது. முதல்பிரதி மட்டும் ஒரு வழியாக கைக்கு வந்தது...

அவரிடம் ஒரு "புல்லட்" இரு சக்கர வாகனம் இருந்தது. ஆனால் அதை அவர் உபயோகித்துப்பார்த்தது மிகவும் அபூர்வமே..! அதே போல யாருடைய இரு சக்கரவாகனத்திலாவது பின் அமர்ந்து சென்றிருக்கிறாரா என்றால் அதுவும் அபூர்வமே. என்னுடன் மட்டும் அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வர ஒப்புக்கொள்ளுவார்.

இரு சக்கர வாகனம் பற்றி காரணம் கேட்டதற்கு " ஒரு நாளு நைட் டவுன்லேருந்து வந்துகிட்டிருந்தேனா... அப்ப ஓடை பக்கத்துல மேம்பாலம் இருக்குல்ல.. அதுல வந்தேனா... "சடார்"ன்னு ஏதோ நெத்தியில அடிச்சுச்சு அண்ணாச்சி. என்னான்னே தெரியல... அப்படியே கீழ விழுந்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் நெனவு வந்திச்சு. எப்படியோ வீட்டுக்கு வந்து சேந்தேன். அன்னைல இருந்து வண்டிய எடுக்கணும்னா பயமா இருக்கு அண்ணாச்சி.. மீறி வண்டி எடுத்தாலும் ஏதோ படபடன்னு வருது." என்றார்.
அந்தப்பகுதிகளில் இரவு நேரங்களில் கழுகுகள் இரு சக்கர வாகனங்களின் விளக்கை (ஒரு வேளை இரையாக கருதுமோ..?) நோக்கி வேகமாக பறந்து வரும். அந்த நேரத்தில் அந்தப்பறவைகள் நம் மீது வேகமாக மோதவும் கூடும். எனக்கும் கிட்டத்தட்ட அதே அனுபவம் ஒரு முறை பின்னர் ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய குடும்பத்தைப்பற்றி அவர் ஒரு போதும் என்னுடன் கதைத்ததில்லை. காரணத்தை நானும் கேட்டதில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு "நமக்கெல்லாம் அது சரிப்படாது அண்ணாச்சி" என்றார்.

பெரும்பான்மையான சமயங்களில் அவர் ஒரு முடிவெடுத்தார் என்றால் அதில் தீர்மானமாக இருப்பார். அப்போது தொழிற்சங்கத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. (தேர்தல் குறித்து சொல்வேனேயானால் அது ஒரு பெரிய தொடர்கதையாகி விடக்கூடும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்கிறேன்.)

எப்போதும் ஒரு குறிப்பிட்ட "தலை"வரே குறிப்பிட்ட கால இடைவெளியில் மகத்தான வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று வந்த காலம் அது.. ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. வழக்கம்போல "அவர்" அந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

தொழிற்சங்கத்தின் தலைவராக புன்னைவனராசனும், பொதுச்செயலராக செல்வதாஸ¤ம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்..! தேர்தல் நடந்திருந்தால் முடிவு என்ன என்பது வேறு கதை. உடன் பிரபாகரனும் நிர்வாகக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் புன்னைவனராசனும், பிரபாகரனும் மிகச்சிறந்த படைப்பாளிகள். புன்னைவனராசனின் கதைகள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பல வார, மாதப் புத்தகங்களில் பிரபாகரன் கதைகளுக்காக பரிசு பெற்றிருக்கிறார்.

எப்போதும் போல அன்றி, அந்தக்குழு உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு குறித்து சரியான விசயங்களை அளித்து வந்தது என்பது என் அசைக்க முடியாத கருத்து. தொழிலாளர்களும் அடிக்கடி அதைப்பற்றி விவாதித்து வந்தனர். மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான பேச்சு வார்த்தை நடந்து கொண்டே.......... இருந்தது. பேச்சுவார்த்தை முடிவடையாமல்..... ஒரு கட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையேயான முரண்பாடுகள் ஒரு பொதுக்குழுவில் வெளிப்படையாக தெரிந்தது.
'மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கத்தயாராக இல்லை' என்று ஒரு நிர்வாகி சொல்ல... கடுமையான வாக்குவாதம் மூண்டது.

ஒரு காலத்தில் ஓரிரு வார்த்தைகளை கூட பேச விடாமல் தடுத்த அதே அரங்கில், அதே தொழிலாளர்கள் அன்றைக்கு சுமார் இரண்டு மணி நேரமாக செல்வதாஸின் தங்கு தடையற்ற பேச்சைக்கேட்டு மூச்சு விட மறந்திருந்தார்கள்...! செல்வதாஸின் சொல்வன்மையைக் கண்டு அனைவரும் திகைத்துப் போனார்கள்.

No comments: