Thursday, May 14, 2009

இன்னொரு வாய்ப்பு

இன்னொரு காலை... ஹும்..... இன்றைக்கும் வேலைக்கு செல்ல வேண்டும்.

ஓ... இது என்ன..? இன்றைய செய்தித்தாளில் இரங்கல் பக்கத்தில் என்னுடைய புகைப்படம்!

என்ன கொடுமை!!வியப்பாகத்தான் இருக்கிறது.

இன்றைக்கு என்ன ஏப்ரல் ஒன்றா... இல்லையே...?கொஞ்சம் யோசித்துப்பார்க்கிறேன். நேற்று படுக்கச் செல்லும் போது எனது மார்பில் நல்ல வலி இருந்தது. அதற்கு பின்னர் எனக்கு எதுவும் தெரியவில்லை. அதற்கு பின்னர் நன்றாக உறங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.

இப்போது நேரம் என்ன....? ஓ.. ஒன்பது மணி ஆகி விட்டதே!

எங்கே என் காஃபி? இன்றைக்கு எப்படியும் அலுவலகத்திற்குத் தாமதமாகத்தான் போக வேண்டியதிருக்கும். மேலாளர் என்னை நன்றாகத் திட்டப்போகிறார்.

"எங்க யாரையும் காணோம்...?" சத்தம் போடுகிறேன்.

இப்போது மெலிதாக வெளியில் பலரும் பேசும் சத்தம் கேட்கிறது.

கதவைத் திறந்து பார்த்தால், நிறைய பேர் இருக்கிறார்கள். சிலர் அழுது கொண்டும் இருக்கிறார்கள்.

ஆ...! என்ன இது... படுக்கையில் நானா....? ஏன் அழுகிறார்கள்?"

நான் இங்க இருக்கேன்"... "எல்லோரும் பாருங்க.. நான் இங்க இருக்கேன்" - நான் கூறுவதை யாரும் கேட்பதாகவோ கவனிப்பதாகவோ தெரியவில்லை.

ஊ...ஹும்..... யாருடைய காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.

மறுபடியும் படுக்கை அறைக்கு சென்று, "நான் செத்துப் போயிட்டேனோ..?" என்று எனக்குள்ளேயே கேட்கிறேன். குழப்பமாக இருக்கிறது.

எங்கே எனது மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா..? - தேடுகிறேன்.

அடுத்த அறையில் அவர்கள் எல்லோரும் இருப்பதும் கதறி அழுவதும் தெரிகிறது.

என் மனைவி மிகவும் சோகத்துடன், அழுது கொண்டிருக்கிறாள். என்னுடைய கடைசிப்பையனும் விசும்பிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன நடந்தது என்று புரியம் வயதில்லை. ஆனாலும் அம்மா அழுவதால் அவனும் அழுதுகொண்டிருக்கிறான்.

என் மேல் அவனுக்கு எவ்வளவு பாசம்!!

அவனை சரியான முறையில் இதுவரை கவனித்திருக்கிறேனா..?

என் மேல் பாசம் வைத்திருக்கும் மனைவி, அம்மா, அப்பா இவர்களை விட்டுப் போவதா..? எத்தனைப் பிரியமான சிநேகிதர்கள்..? என்னுடைய கஷ்டகாலத்தில் என்னுடனே இருந்து எனக்கு கைகொடுத்தவர்கள். அவர்களுக்கு தேவைப்படும் சமயங்களில் நான் உதவாத போதும் கூட அதை நினைக்காது உதவியவர்கள்.... இவர்களை விட்டுவிட்டு நான் எங்கே போவது?

அறையின் மூலையில் ஒருவன் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறான். ஓ..... இவனா..! ஒரு காலத்தில் என்னுடைய ஆருயிர் நண்பனாயிற்றே. ஒரு சின்ன மனக்கசப்பில் நாங்கள் பிரிந்தோம். எங்களிருவருக்கும் இருந்த ஈகோ... அதை என்னவென்று சொல்ல... தற்பெருமையா, கர்வமா.... ஏதோ ஒன்று எங்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்து விட்டது.

அவன் அருகில் போய் கையை நீட்டுகிறேன்.

"டேய்... எல்லாத்துக்கும் சேத்து மன்னிப்பு கேக்க வந்திருக்கேன். நாம ரெண்டு பேரும் இன்னும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்தாண்டா. என்னை மன்னிச்சுடு.." என்கிறேன்.

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை!`ஹும்.. அவன் திருந்தவே இல்லை. அவனுக்கு இருக்கும் கர்வம் இன்னும் குறையவே இல்லை. நான் மன்னிப்பு கேட்ட பிறகும் பிகு செய்கிறானே..? இவனைப் போன்றவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை?

ம்..... ஒரு வேளை.... ஒரு வேளை.... அவனால் என்னைப்பார்க்க முடியவில்லையோ.? நான் கையை நீட்டியதும் அவனுக்குத் தெரியவில்லையோ...? தெரியவில்லையே.... நான் உண்மையிலேயே இறந்து விட்டேனா..? அடக்கடவுளே....!

படுக்கையில் எனக்கருகே அமருகிறேன். எனக்கு அழ வேண்டும் போலிருக்கிறது."

கடவுளே.... எனக்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் அவகாசம் கொடு.." மன்றாடுகிறேன்.

என்னை சுற்றி இருப்பவர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் என்பது இதுவரை தெரியாமலே போய்விட்டதே?

என் மனைவி அறையில் நுழைகிறாள்.

"நீ ரொம்ப அழகாயிருக்கே" என்கிறேன். வார்த்தைகள் அவளை சென்றடையவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது. அவளிடம் அப்படி இதுவரை சொன்னதே இல்லை என்பதும் நினைவுக்கு வருகிறது.

"கடவுளே... இன்னும் கொஞ்ச நேரமாவது என்னை உயிரோடு வாழ விடமாட்டாயா..?" என அழுது கொண்டே வேண்டுகிறேன்.

ஒரே ஒரு தடவை என் குழந்தையை அணைத்துக்கொள்ள, ஒரே ஒரு தடவை அம்மாவின் முகத்தில் சிரிப்பைப்பார்க்க, என் தந்தையை பெருமிதப்பட வைக்க, என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, அவர்களிடம் என் நன்றியைக்கூற ..... "கடவுளே... தயவு செய்து ஒரே ஒரு முறை வாய்ப்புக்கொடு." - கத்துகிறேன்.

"என்னங்க.... சத்தம் போடுறீங்க...? கெட்ட கனவு ஏதாச்சும் கண்டீங்களா..?" என்றாள் என் மனைவி.

அப்போ..... இதுவரை தூங்கிக்கொண்டிருந்தேனா..? கண்டதெல்லாம் கனவுதானா..?

இதோ என் மனைவி! நான் சொல்வதெல்லாம் அவள் காதில் விழும்!! ஆஹா.... எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அவளைக்கட்டியணைத்து, காதில் மெதுவாக " இந்த உலகத்திலேயே நீதான் மிகவும் அழகானவள். உன்னை உண்மையிலேயே மிகவும் நேசிக்கிறேன்" என சொன்னேன்.

வெட்கத்தில் அவள் முகம் புன்னகை பூத்தது. கூடவே விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீரும்.... இருந்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி கடவுளே...! இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு...!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதி : இப்போதும் தாமதமாகி விடவில்லை. உங்களுடைய கர்வம், தற்பெருமை, கோபம், கடந்த காலம் எல்லாவற்றையும் மறந்து விட்டு, உங்கள் அன்பைக்கூறுங்கள். அனைவரிடமும் நட்பாக இருங்கள் ; அகமகிழ்ந்திருங்கள் - எப்போதும்.

No comments: