Wednesday, April 08, 2009

மின்னஞ்சல் கதைகள்

சிகை அலங்கார நிலையத்தில்....

ஒரு நாள் ஒரு விவசாயி முடி திருத்துவதற்காக சிகை அலங்காரம் செய்யும் அந்தக்கடைக்கு சென்றிருந்தார். அலங்காரம் முடிந்ததும் அதற்கான கூலி எவ்வளவு என்று சிகை அலங்காரம் செய்பவரிடம் கேட்டார். அதற்கு அந்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். விவசாயி அவரது பதிலில் நெகிழ்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்கச் சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் ஒரு கொத்து ரோஜா மலர்கள் இருந்தன.

சற்று நேரம் கழித்து ஒரு காவலர் அந்தக்கடைக்கு வந்தார். முடி திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவென முடிவெடுத்திருக்கிறேன்" என்றார். காவலர் அவரது பதிலைக் கேட்டு வியப்புடன் விடை பெற்றார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் இனிப்புகள் நிரப்பப்பட்ட ஒரு பையும் இருந்தது.

அதற்கடுத்த நாளில் ஒரு ஆசிரியர் அந்தக்கடைக்கு வந்தார். முந்தைய தினங்களைப் போன்றே, சிகை திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். ஆசிரியரும் அவரது பதிலில் அசந்து போனார்.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது - கடையின் வாசலில் "நன்றி" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையுடன் ஒரு டஜன் புத்தகங்கள் - தொழிலை மேம்படுத்துவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி - போன்ற புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதற்கடுத்த நாளில் ஒரு மக்களவை உறுப்பினர் அந்தக்கடைக்கு வந்தார். வழக்கம் போலவே, முடி திருத்தி முடிந்ததும் அதற்கான பணம் எதையும் பெற்றுக்கொள்ள மறுத்த சிகை அலங்கார நிபுணர் "நான் உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டேன். இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் உழைப்பவர்களுக்காக இலவசமாக முடி திருத்துவேன்" என்றார். மக்களவை உறுப்பினருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

அடுத்த நாள் காலையில் அந்த சிகை அலங்கார நிபுணர் தனது கடையை திறக்க சென்ற போது கடையின் வாசலில் ...................................

ஒரு டஜன் மக்களவை உறுப்பினர்கள் இலவசமாக முடி வெட்டிக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------நீதி: அன்பு நண்பர்களே, சாதாரண குடிமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரிகிறதா...? இந்த வருடமாவது சற்று சிந்தித்து வாக்களியுங்கள்.

2 comments:

*இயற்கை ராஜி* said...

:-))))

ரங்குடு said...

எப்போது அந்த முடி திருத்துபவர் 'இலவசமாக' ஒன்றைச் செய்ய முற்படுகிறாரோ அங்கேயே பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது.
மேலும், எப்போது ஒரு பூங்கொத்தும், புத்தகங்களும் அவருக்கு வந்து சேர்கிறதோ அப்போதே அவரது 'இலவசம்' அடிபட்டுப் போய் விடுகிறது.

அடுத்த படியாக, மக்கள் சிந்தித்து வாக்களித்தால் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அரசியல் வாதி இல்லாமல் வேறு நபராக மாறி விடுவாரா?

அடுத்து, விவசாயி சமூக சேவகரா? செய் தொழிலுக்குக் கூலி வாங்கும் யாருமே சமூக சேவகர் அல்ல.
தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமே சமூக சேவகர் எனக்கூறலாம்.

எந்தக் காவலர் நல்லவர் என்று கூறுகிறீர்கள்? அந்த இனிப்புப் பொட்டலத்தை அந்தக் காவலர் எங்கே மாமூலாய் வாங்கினாரோ?

ஆசிரியர் சமூகத் தொண்டரா? நான் நம்ப மாட்டேன். பழைய தமிழ் மரபுப் படி ஆசிரியர்கள் வேறு, தற்கால ஆசிரியர்கள் வேறு. அவர்களாக முயன்றாலும், சமூகத் தொண்ட்டராக மாற முடியாத நிலை இன்று.

நமக்கு இன்றையத் தேவை என்ன வென்றால், குற்றம் செய்தவர்க்கு கடுமையான தண்டனை. அரசியல் வாதியாக இருக்கட்டும், ஆசிரியராக இருக்கட்டும் படஹ்விக்கு வருவதில் தப்பில்லை. ஆனால் அதில் ஊழலோ தவறோ செய்தால் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும்.