Monday, December 20, 2004

குற்றாலம் - 6

எலே... மேல போகும் போது வழுக்குமே.. செருப்ப எல்லாம் வண்டியில வச்சிட்டு போலாமே...ன்னு சத்தியமோகன் அபிப்பிராயப்பட்டான். ஆனா நாங்க மத்த மூணு பேரும் சும்மா செருப்போட போகலாம்ணு சொன்னோம். மெஜாரிட்டி சொன்ன பின்னாடி அப்புறம் என்ன..? செருப்பு போட்டுகிட்டேதான் போனோம்.

மேல போகுற வழியல அங்க அங்க சின்ன சின்னதா அருவி மாதிரி இருக்குற இடத்துல் எல்லாம் ஆளுங்க குளிச்சிட்டுகிட்டிருந்தாங்க..

செண்பகா தேவி அருவிக்கு போய் சேந்தோம். வசதியா அருவில குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி... குளத்துல குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி.. கிணத்துல குளிக்கணும் நெனக்கிறவங்களுக்கும் சரி.... அது ரொம்ப அருமையான இடம். ஏன்னா அருவி விழுற இடத்துல நின்னு வசதியா குளிக்கலாம். கொஞ்சம் தள்ளி பெரிய கிணறு மாதிரி அருவித்தண்ணி தேங்கி அப்புறமா போற இடம் இருக்கும். நல்ல ஆழத்துல இருந்து நின்னு குளிக்கிற அளவு ஆழம் வரைக்கும் தண்ணி இருக்கும். துணிச்சலா மேல இருந்து "டைவ்" அடிக்கிறவங்களுக்கும் அங்க ரொம்ப வசதிதான்...
எப்பயும் இருக்குறத விட இந்தத்தடவ கூட்டம் கொஞ்சம் கூடத்தான் இருந்துச்சு...!

நேரம் வேற ஆயிட்டிருக்கு... கீழ வரும் போது பாத்துக்கலாம்னு அதுக்கு மேல போக ஆரம்பிச்சோம்.
போற வழியில அங்க அங்க பாறைங்க இருந்துச்சா... செருப்போட நடந்து போறது கொஞ்சம் செரமமா இருந்துச்சு. கொஞ்ச தூரம் கைல செருப்ப தூக்கிட்டு நடந்தமா... அப்புறமா யோசன பண்ணி.... ஏதாவது ஒரு இடத்துல செருப்ப எல்லாம் ஒளிச்சி வச்சிட்டுப் போலாம்.. வர்றப்ப எடுத்துக்கலாம்னு...

ஒரு இடத்த அடையாளம் பாத்துகிட்டு செருப்ப எல்லாம் வச்சோம். சத்தியமோகனுது மட்டும் சாதாரண சிலிப்பர். மத்தவங்களுது எல்லாம் "பாட்டா".

மேல போக போக கொஞ்சம் கொஞ்சமா ஆள் நடமாட்டம் குறைய ஆரம்பிச்சிருச்சு. இருந்தாலும் ரெண்டு பேரு... மூணு பேருண்ணு அங்க அங்க ஆளுங்க வந்துகிட்டு இருந்தாங்க.

சின்ன வயசுல படிச்ச குற்றாலக்குறவஞ்சி நினைவுக்கு வந்துச்சு... கொரங்குக வேற அங்க அங்க உர்..உர்..னு சத்தம் போட்டுகிட்டு கூட்டமா சுத்திகிட்டு இருந்துச்சுங்க.

தூறல் வேற லேசா விழுந்துகிட்டே இருந்துச்சு.. தேனருவிய பாக்கப் போகணுங்கிறதுல இருந்ததால நேரம் போறதே தெரியல.. வெயிலே தெரியாத அளவுக்கு மோடம் போட்டிருந்துச்சு.
போய்கிட்டு இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமா ஒரு பத்து பேருகிட்ட சேர்ந்துட்டோம். வரிசையா பேசிகிட்டே போனோம். ஒரு இடத்துல சின்ன ஓடை மாதிரி இருந்துச்சு. அது தாண்டிப் போறதுக்காக கட்டுன பாலம் ஒடஞ்சி போயி இருந்ததால, அந்த ஓடைக்கு அந்தப்பக்கம் போகணும்னா ஓடையில நடந்துதான் போகணும். நாம நடக்குற இடத்துல ஒரு பெரிய பாற இருந்துச்சு. அதுக்கு மேல கணுக்கால் அளவுக்கு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சு. அந்தப் பாற ஒரு ஆறு ஏழடி இருக்கும். அதுல கால் வச்சதுமே தண்ணி "சர்"ன்னு இழுக்குற மாதிரி இருந்துச்சு. ஆழமில்லாட்டி கூட ஆள இழுத்துரும் போல இருந்துச்சு.

ஒரு வழியா அதத் தாண்டி மேல போக ஆரம்பிச்சோம். மேல இருந்து ஆளுங்க எல்லாம் கீழ வந்துகிட்டு இருந்தாங்க...

No comments: