Friday, January 07, 2005

செல்வதாஸ்-1

"எவம்லே அது.... இவன எல்லாம் பேசவிட்டா எல்லாரையும் கிறுக்கனாக்கிருவாம்ல...."

"பேசாத... ஒக்காருலே..."

"இவம்பேசி கேக்கணுமோ...?"

" பேசுனா ஒண்ணுமே புரியாது... உக்காரு.... பேசாதே...."

இப்படி ஒரே சத்தம்தான் அந்தப்பொதுக்குழுக்கூட்டத்தில்.... நிறுவனத்தில் பயிற்சியாளனாக பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப்பிறகு, தொழிற்சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பின்னர் தொழிற்சங்கம் கூட்டிய அந்தக்கூட்டத்தில்தான் மேலேயுள்ள நான் கேட்ட அமைதியற்ற குரல்கள்.....

இப்படி யாரைச் சொல்கிறார்கள் என்பதைக் காண முடியாதபடி நிறைய உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆர்வமிகுதியில் "யாரது" என்று கேட்டேன்.

"எல்லா அவந்தாம்லே... செல்வதாசு..." என்றார் அருகில் இருந்தவர்.

சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் என்றாலும் பெரும்பாலும் நான் இருந்த மின்துறைக்கு சம்பந்தப்பட்டவர்களையும், என்னுடன் பணிக்கு ஒரே நேரத்தில் இணைந்த அந்த (என்ஜீனியரிங் சபார்டினேட் சர்வீஸ் என்று அழைக்கப்பட்ட) எட்டாவது குழு நண்பர்களை மட்டுமே நான் அறிந்திருந்தேன். இயல்பாகவே நான் யாருடனும் பேச அதிகம் கூச்சப்படுவேன். பெரும்பாலோனாரால் இகழப்பட்ட அந்த செல்வதாசை அன்று பார்க்க இயலவில்லை. என்றாலும் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது. ஆனாலும் அதற்காக எந்த முயற்சியையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் "ஆபரேசன்" துறையில் பணிபுரிகிறார் என்கிற விபரம் மட்டும் எனக்குத் தெரிந்தது.

சில வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள் வருகைப்பதிவை பதிவு செய்யும் டைம் ஆ·பிஸில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. செல்வதாசை அடையாளம் காட்டினான் ஒரு நண்பன்.
சராசரிக்கும் குறைவான உயரம்... தூத்துக்குடிப் பகுதிக்கே உரிய உழைப்பாலும் வெயிலாலும் உண்டான கருப்பு நிறம்.... கூரிய சிறிய கண்கள்... படர்ந்த நெற்றி.... எண்ணெய் வாரி சீவப்பட்ட முடி... சற்றே நுனியில் முறுக்கிவிடப்பட்ட மீசை... இவ்வளவுதான்.. எந்த வித்தியாசமும் இல்லை...

வருகையை பதிவு செய்யும் கருவியில் அட்டையை வைத்து, கைப்பிடியை அழுத்தி வருகையை பதிவு செய்து அதை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு இரண்டு கையையும் வீசி நடக்க ஆரம்பித்தார் அவர்.

அநேகமாக எல்லோரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நடந்து செல்லும் அவர் எனக்கு சற்றே வியப்பை ஊட்டினார். அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் சில மாதங்கள் கடந்தன... நான் "பேகிங்" என்று அழைக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட உரம் மூட்டைகளில் அடைக்கப்படும் பகுதிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். அங்குதான் செல்வதாஸ¤ம் பணிபுரிந்து வந்தார்.

No comments: